வங்காளதேசத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.4.32 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற 60 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
கொல்கத்தா,
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அந்த வாகனம் பெட்ராபோல் பகுதியில் வந்தபோது, எல்லை பாதுகாப்பு படையினர் அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், வாகனத்தில் கடத்த முயன்ற 60 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த எடை 6.998 கிலோ. அவற்றின் மதிப்பு ரூ.4.32 கோடி ஆகும்.
அந்த வாகனத்தின் ஓட்டுநர், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜாய்ப்பூர் கிராம பகுதியை சேர்ந்த சுராஜ் மேக் (வயது 23) என அடையாளம் காணப்பட்டார்.
ஓராண்டாக அவர், சரக்கு வாகனம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் சரக்குகளை ஏற்றி கொண்டு கொல்கத்தாவில் இருந்து வங்காளதேசத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
இதன்படி, கடந்த அக்டோபர் 30-ந்தேதி அவர் சரக்குகளை ஏற்றி கொண்டு பெனபோல் துறைமுக பகுதிக்கு சென்று சரக்குகளை இறக்கியுள்ளார்.
இதன்பின்பு, திரும்பி வரும் முன்பு அவரை தொடர்பு கொண்ட வங்காளதேச நாட்டை சேர்ந்த முகமது மமூன் என்பவர் சில தங்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதற்காக வங்காளதேசத்தின் பண மதிப்பில் 10 ஆயிரம் டாக்கா வழங்கப்படும் என கூறியுள்ளார். சுராஜும், தாயாரின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்ற காரணத்திற்காக அதற்கு சரியென ஒப்பு கொண்டார்.
வாகனத்தில், தங்க பிஸ்கெட்டுகளை மறைத்து வைத்து வரும் வழியில், எல்லை பாதுகாப்பு படையினரின் வாகன சோதனையில் நேற்று அவர் பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.