துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி தங்கம் சிக்கியது
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் பயணி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.;
மங்களூரு
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் பயணி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மங்களூரு விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், போதைப்பொருட்களை பயணிகள் கடத்தி வருவதையும், அவற்றை அங்குள்ள சுங்க வரித்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் சோதனையிட்டு பிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
பறிமுதல்
இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது அவர் உள்ளாடைகளுக்குள் நூதன முறையில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடத்தி வந்த ரூ.84 லட்சத்து 86 ஆயிரத்து 440 மதிப்பிலான 684 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போலீசில் ஒப்படைப்பு
இதேபோல் மற்றொரு ஆண் பயணி கடத்தி வந்த ரூ.49 லட்சத்து 74 ஆயிரத்து 240 மதிப்பிலான தங்கத்தையும் சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடம் இருந்தும் மொத்தம் ரூ.1 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்து 680 மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இருவரையும் அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.