மும்பை விமான நிலையத்தில் ரூ.6.75 கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.6.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-01 16:30 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 4 நாட்களில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் ரூ.6.75 கோடி மதிப்புள்ள 9.79 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சார்ஜா மற்றும் மஸ்கட்டில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய வெளிநாட்டுப் பயணிகள் 2 பேர், தங்கத்தை துகள்களாக மாற்றி அதனை பிரார்த்தனை செய்ய பயன்படுத்தப்படும் விரிப்புக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் துபாயில் இருந்து மும்பை வந்திறங்கிய இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் சானிட்டரி நாப்கினுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கொழும்பு மற்றும் துபாயில் இருந்து வந்த 5 வெளிநாட்டு பயணிகள் அவர்களின் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளனர். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவத்தில், இந்தியர் ஒருவர் ஷாம்பு பாட்டிலுக்குள் ரூ.88.6 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை பாங்காக்கிற்கு கடத்திச் செல்ல முயன்றபோது சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்