கோவா: விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளப்பிய நபர் கைது

மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையில் ஈடுபட்டது.

Update: 2024-01-30 22:46 GMT

பனாஜி,

கோவாவின் மொபா நகரில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணி ஒருவர் வந்துள்ளார். குஜராத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த அவர், கோவாவில் இருந்து குஜராத் செல்வதற்காக வந்துள்ளார். அவரிடம் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவரிடம் விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர், தடை செய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர், ஆம். பையில் வெடிகுண்டு ஒன்றை வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உயரதிகாளிடம் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி தனியார் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இதன்பின்னர், மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையில் ஈடுபட்டது. அவரிடமும், பயணிகளின் உடைமைகள் மற்றும் பைகளிலும் முழுஅளவில் சோதனை செய்யப்பட்டது.

இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்றும் தெரிய வந்தது. அந்த நபர், விமல் பிரஜாபதி (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்