திவால் ஆன 'கோ பர்ஸ்ட்' நிறுவன விமானங்கள் ரத்து விமான கட்டணம் உயரும் அபாயம்
திவால் ஆனதாக அறிவித்த ‘கோ பர்ஸ்ட்’ தனியார் விமான நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
திவால் ஆனதாக அறிவித்த 'கோ பர்ஸ்ட்' தனியார் விமான நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாடியா குழுமத்துக்கு சொந்தமான 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம், 17 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வருகிறது. உள்நாட்டில் 27 இடங்களுக்கும், வெளிநாடுகளில் 8 இடங்களுக்கும் அதன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, 'கோ பர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. என்ஜின் சப்ளையிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்தது.
திவால் சட்டத்தின்கீழ், திவால் தொடர்பான நடைமுறைகளை சந்திக்க விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், 'கோ பர்ஸ்ட்' நிறுவனம் தனது அனைத்து விமானங்களையும் திடீரென ரத்து செய்துள்ளது. நேற்று முதல் 3 நாட்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இதை எதிர்பார்க்காத பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேறுவழியின்றி கட்டணத்தை திரும்ப பெறுவதில் கவனம் செலுத்தினர். சிலர் வேறு விமானங்களில் அதிக கட்டணம் செலுத்தியும், சிலர் ரெயில்களிலும் பயணம் செய்ய வேண்டியதாகி விட்டது.
இதற்கிடையே, 'கோ பர்ஸ்ட்' நிறுவனத்தின் செயலால் விமான கட்டணம் உயரும் என்று இந்திய பயண முகவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜோதி மாயாள் கூறியதாவது:-
ஏற்கனவே கிங்பிஷர் ஏல்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களால் கோடிக்கணக்கான பணத்தை இழந்தோம். தற்போது, இன்னொரு நிறுவனத்தின் திவால் பிரச்சினையை சந்திக்கிறோம். இது, விமான தொழிலுக்கு மோசமானது.
கோடை விடுமுறையால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் இந்நிகழ்வு நடந்துள்ளது. விமானங்கள் ரத்து காரணமாக, இருக்கைகள் குறையும் என்பதால், அந்த வழித்தடத்தில் மற்ற விமானங்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தற்போதைய சூழ்நிலையை கவனமுடன் கடக்க எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும், ஊழியர்கள் மீது அக்கறை செலுத்தி வருவதாகவும் 'கோ பர்ஸ்ட்' தலைவர் கவுசிக் கோனா கூறியுள்ளார்.