கடலோர காவல்படை குடியிருப்பில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
15 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
மும்பை எல்லோகேட் பகுதியில் கடலோர காவல்படை அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், அங்குள்ள கடலோர காவல்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
அதே குடியிருப்பில் வசித்து வரும் சக ஊழியர்களான 30 மற்றும் 23 வயதுடைய 2 பேர் சிறுமி வீட்டில் உள்ளவர்களுடன் வந்து பழகி வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். இதனை அறிந்த 30 வயது ஊழியர், சிறுமியின் வீட்டிற்கு சென்று தனது மனைவி அழைப்பதாக சிறுமியிடம் கூறினார்.
இதனை நம்பிய சிறுமி ஊழியரின் வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கு இருந்த 23 வயது ஊழியர் திடீரென சிறுமியின் வாயை பொத்தி வீட்டில் உள்ள அறைக்கு இழுத்துச் சென்றார். பின்னர் சிறுமியை மிரட்டி 2 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதில் பயந்துபோன சிறுமியை கடந்த 2 மாதமாக இரு ஊழியர்களும் மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தனர். இதனால் கடும் மனஉளைச்சல் அடைந்த சிறுமி சம்பவம் குறித்து அண்மையில் பெற்றோரிடம் கூறி அழுதாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 ஊழியர்களையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.