காட்டு யானை தாக்கி பெண் சாவு

மூடிகெரேயில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-20 18:45 GMT

சிக்கமகளூரு:-

யானை தாக்கி பெண் சாவு

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹுல்மனே குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவரது மனைவி ஷோபா (வயது 40). நேற்று காலை இவர்கள் 2 பேரும் வனப்பகுதியையொட்டி உள்ள தங்கள் தோட்டத்துக்கு சென்று மாடுகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனாலும் அந்த யானை, 2 பேரையும் விடாமல் விரட்டி சென்றது. அப்போது ஷோபா யானையிடம் சிக்கி கொண்டார். அவரை யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்தது. இதில் ஷோபா சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்கள் கோரிக்கை

இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னா், யானை தாக்கி உயிரிழந்த ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை சூழ்ந்துகொண்டு, கிராமத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் யானை தாக்கி உயிரிழந்த ேஷாபாவின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பீதி

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்