இவ்வளவு பெரிய நாட்டில் பயணிக்க இந்தி மட்டும் போதாது; தாய்மொழியும் ஆங்கிலமும் அவசியம் - ஜெர்மன் தூதர்!

பிரதமர் மோடி எவ்வாறு 'இவ்வளவு பெரிய நாட்டை வழிநடத்துகிறார்' என்று இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பாராட்டினார்.;

Update: 2022-06-01 14:04 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி எவ்வாறு 'இவ்வளவு பெரிய நாட்டை வழிநடத்துகிறார்' என்று இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பாராட்டினார்.

ஜெர்மனி தூதராக இருந்து வந்த லிண்ட்னர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஜெர்மன் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவதை எப்போதும் விரும்புவார். இவ்வளவு பெரிய நாட்டை அவர் எப்படி நடத்துகிறார் என்று அவர் எப்போதும் அவரிடம் கேட்பார்.

நான் இன்னும் நான்கு வாரங்களில் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன். நான் 1976 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததிலிருந்து, இந்த நாடு என் நாடி நரம்புகளில் கலந்து உள்ளது. என்னை விட்டு விலகவில்லை.

ஒரு மனிதன் முழுமையாக வாழ வேண்டும் என்பதை இந்தியா எனக்கு கற்றுக் கொடுத்தது. இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, தனித்துவம் மற்றும் இவை அனைத்தையும் ஒரே அமைப்பாக இணைக்கும் திறன் பாராட்டத்தக்கது. இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' தத்துவம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.


இந்தி மொழி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்வதற்கு இந்தி மட்டும் போதாது. இந்தியாவில் வசிக்கும் பலரும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் பேசும் இடங்கள் உள்ளன. இந்தியாவில் பேசும் அந்த முக்கியமான பத்து மொழிகளில் நான் பேச விரும்புகிறேன்.

நான் இந்தியர்களுடன் அவர்களின் தாய்மொழியில் தொடர்பு கொண்டபோது புன்னகையை அவர்களின் முகத்தில் பார்த்தேன். தாய்மொழியில் பேசும்போது வெளிப்பட்ட அந்த புன்னகை, மனிதநேயத்தையும் பணிவையும் காட்டுகிறது.

எப்போதுமே உத்வேகத்தை அளிக்கும் முடிவில்லாத ஆதாரமாக இந்தியா விளங்குகிறது. இந்திய மக்கள் உண்மையிலேயே நம்பமுடியாத அளவுக்கு வியக்கத்தக்க மனிதர்கள் ஆவர்.

ஐ.நா.சபையில் சீர்திருத்தங்கள்

நான் ஐ.நா. சபையின் பெரிய ரசிகன். அவர்களிடம் எல்லா குறைபாடுகளும் உள்ளன. ஆனால் நாம் அவசரமாக அவற்றை சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

ரஷியா மீதான தடை

விளாடிமிர் புதின் தனது ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். பொருளாதாரத் தடைகள் மூலம் உலகளவில் ரஷியா மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்த தடை நடவடிக்கைகள் அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.

இந்த போரில் அவரை வெல்ல அனுமதித்தால், அண்டை நாடுகளின் மீது படையெடுப்பின் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று நினைக்கும் அனைத்து நாடுகளுக்கும், அதுபோன்ற நாடுகளின் தலைவர்களுக்கும் அது ஒரு மோசமான உதாரணம் ஆக மாறக்கூடும்.

இவ்வாறு இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜெ லிண்ட்னெர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்