மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2023-10-15 21:33 GMT

கோப்புப்படம்

இம்பால்,

மணிப்பூாில் கடந்த மே மாதம், குகி-மெய்தி இனக்குழுக்களுக்குள் பயங்கர மோதல் வெடித்ததில் மணிப்பூர் கலவரபூமியானது. தற்போது வரை அங்கு நீறு பூத்த நெருப்பாக வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு, போலீஸ் சீருடையில் சுற்றித்திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தன்னார்வலர்கள் என்று அவர்களின் கைதுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கைதானவர்களில் போராட்ட இயக்கத்தை சேர்ந்தவரும் இடம் பெற்றிருந்ததால், 5 போராளிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எப்.) உள்பட 5 தடை செய்யப்பட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு குழு இந்த பொது வேலைநிறுத்தத்தை அறிவித்தன.

அதன்படி நேற்று மணிப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்டிருந்தன. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சில தனியார் வாகனங்கள் தவிர எந்த வாகனங்களும் ஓடவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்