பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேறியது; தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்

இந்த சட்டம் அமல்படுத்தப்படும்போது, சமூகத்தில் உள்ள தீங்கு ஏற்படுத்தும் விசயங்கள் களையப்படும்.;

Update: 2024-02-07 14:19 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு ஒப்புதல் கிடைத்தது. இதனால், அந்த மாநிலத்தின் சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதற்கான வழியேற்பட்டது. இதனை தொடர்ந்து அதற்கான சிறப்பு 4 நாட்கள் கூட்டத்தொடர் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மசோதாவானது, திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சட்டங்கள் ஆகியவற்றில் மாநிலத்தில், எந்தவித மதவேற்றுமையும் இன்றி அனைத்து குடிமக்களுக்கும் சீரான ஒரு சட்ட வடிவம் கிடைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை, முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி தலைமையிலான அரசு தாக்கல் செய்து விவாதத்திற்கு எடுத்து கொண்டது.

இதன்பின்னர் பலத்த ஆதரவுடன் அந்த மசோதா அவையில் இன்று நிறைவேறியது. இதுபற்றி பேசிய மந்திரி பிரேம் சந்த் அகர்வால் கூறும்போது, இந்த சட்டம் அமல்படுத்தப்படும்போது, சமூகத்தில் உள்ள தீங்கு ஏற்படுத்தும் விசயங்கள் களையப்படும்.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இந்த மசோதா முதலில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தொடர்ந்து, சட்டம் என்ற வகையில் மாநிலத்தில் அது அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் என கூறினார்.

உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறிய தகவல் தெரிந்ததும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை, பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் பெறும்.

Tags:    

மேலும் செய்திகள்