உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் அடியில் கியாஸ் குழாய் வெடித்து விபத்து
உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் அடியில் கியாஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கியாஸ் நிறுவனம் யமுனை ஆற்றின் அடியில் குழாய்களை பதித்து கியாஸ் வினியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள ஜகோஷ் கிராமத்தில் யமுனை ஆற்றின் கீழ் செல்லும் கியாஸ் குழாய் நேற்று காலை திடீரென வெடித்தது. இதனால் ஆற்றில் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு எழுந்தது.
இது உள்ளூர் மக்களிடையே பீதியை ஏற்படுதியது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை கலெக்டர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.
இதனிடையே விபத்தை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்ட குழாயில் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டதாக தனியார் கியாஸ் நிறுவனம் தெரிவித்தது.