பெங்களூருவில் கியாஸ் குழாய் வெடித்து தீப்பிடித்தது; 3 பேர் படுகாயம்
பெங்களூருவில் குடிநீர் வாரியம் குழி தோண்டியதால் கியாஸ் குழாய் உடைந்து வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள்.;
பெங்களூரு:
பெங்களூருவில் குடிநீர் வாரியம் குழி தோண்டியதால் கியாஸ் குழாய் உடைந்து வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
கியாஸ் குழாய் உடைந்தது
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் 7-வது செக்டார் பகுதியில் பூமிக்கு அடியில் கெயில் நிறுவனம் சார்பில் கியாஸ் குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் 7-வது செக்டார் பகுதியில் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் குழி தோண்டப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சென்ற குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கியாஸ் கசிந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதன் காரணமாக 2 வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே உடைந்து நொறுங்கியது. சுவர்களிலும் விரிசல் உண்டானது. அத்துடன் அங்கு தீயும் பிடித்தது. இதில், பெண்கள் உள்பட 3 பேர் பலத்தகாயம் அடைந்தார்கள். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட கியாஸ் குழாயை சரி செய்தார்கள்.
30 சதவீத தீக்காயம்
மேலும் அங்கு பிடித்து எரிந்த தீயையும் அணைத்தார்கள். அதன்பிறகு, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், பலத்த காயம் அடைந்தவர்கள் அஜ்சும்(வயது 40), முபாசீர்(38) மற்றும் ஜூபேர்(26) என்று தெரிந்தது. 3 பேருக்கும் 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
கெயில் நிறுவனத்திடம் முறையாக தெரிவிக்காமல், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் குழி தோண்டியதால், கியாஸ் குழாய் உடைந்து வெடித்து சிதறி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.