அஜ்ஜாம்புராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீவிபத்து

அஜ்ஜாம்புராவில், சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு எரிந்தது. இதில் 2 பசுமாடுகள், ஆடுகள் தீயில் கருகி செத்தன.

Update: 2023-08-02 18:45 GMT

சிக்கமகளூரு-

அஜ்ஜாம்புராவில், சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு எரிந்தது. இதில் 2 பசுமாடுகள், ஆடுகள் தீயில் கருகி செத்தன.

விவசாயி

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா பானூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தப்பா (வயது68). விவசாயி. இவரது மகன் கரியப்பா. இந்தநிலையில் அனுமந்தப்பா கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் அவதி அடைந்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அனுமந்தப்பா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தநிைலயில் அனுமந்தப்பாவின் உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் அனைவரும் மயானத்திற்கு சென்றனர். வீட்டில் அனுமந்தப்பாவின் தாயார் மட்டும் இருந்தார்.

இந்தநிலையில் அவர் சமையல் செய்ய கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனை கவனித்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அஜ்ஜாம்புரா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் அஜ்ஜாம்புரா போலீசாருடன் விரைந்து வந்தனர்.

எரிந்து நாசம்

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயற்சித்தனர். தீ அடுத்தடுத்து பரவியதால் அருகே இருந்த மாட்டு கொட்டகையில் தீப்பிடித்தது. இதில், 2 பசுமாடுகள், 3 ஆடுகள் தீயில் கருகின. பின்னர் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

பின்னர் உடல் அடக்கம் முடிந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் வீடு எரிந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க வைத்தது. இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்