சர்வதேச எல்லை வழியே ஊடுருவ முயன்ற கும்பல்; பி.எஸ்.எப். அதிரடி
இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை பகுதிகளில் சட்டவிரோத நுழைவு அல்லது கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க திறமையான முறையில் எல்லை மேலாண்மை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதனை எதிர்த்து, மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த ஜூலையில் 300 பேர் பலியானார்கள். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி போராட்டம் தீவிரமடைந்ததில், ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சூழலில், சர்வதேச எல்லையின் 3 முதல் 4 இடங்கள் வழியே வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ 500-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று முயன்றது. அப்போது, எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) அதிரடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதுபற்றி பி.எஸ்.எப். படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தொடக்கத்தில் 50 பேர் வந்தனர். பல்வேறு இடங்களிலும் அதுபோன்று அதிக எண்ணிக்கையில் வந்தனர். இதனால், 300, 500 என கும்பலின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் இந்திய எல்லைக்குள் உட்புக முயன்றனர் என கூறியுள்ளார்.
எனினும் அவர்கள், வங்காளதேச எல்லை பாதுகாப்பு படை, அரசு நிர்வாகம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து விரட்டியடிக்கப்பட்டனர் என்றார்.
இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை பகுதிகளில் சட்டவிரோத நுழைவு அல்லது கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க திறமையான முறையில் எல்லை மேலாண்மை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.