விநாயகர் சிலைகள் கரைப்பு: மராட்டியத்தில் 19 பேர் பலி - போலீசார் தகவல்

மராட்டியத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பின் போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 19 பக்தர்கள் பலியானார்கள்.;

Update: 2022-09-11 02:21 GMT

மும்பை,

மராட்டியத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் ஆனந்த சதுர்த்தி எனப்படும் சிலை கரைப்பு தினத்துடன் 10 நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிவுக்கு வந்தது.

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கொரோனா கட்டுப்பாடுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விநாயகர் சிலை ஊர்வலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது 19 பக்தர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 14 பேர் நீர்நிலைகளில் மூழ்கி பலியானது தெரியவந்து உள்ளது. இதேபோல பன்வெல், வாத்கார் கோலிவாடாவில் மின் வயர் அறுந்து விழுந்ததில் சிலை கரைக்க சென்ற 11 பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 9 மாத பெண் குழந்தையும் அடங்கும்.

இதுதவிர மாநிலத்தில் சிலை கரைப்பின் போது ஒரு சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதேபோல புனே நகர், ஊரகப்பகுதி, சந்திராப்பூர் ஆகிய இடங்களிலும் இரு தரப்பினர் இடையே சிறு, சிறு மோதல்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்