கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் மகாத்மா காந்தியின் உருவம் கொண்ட மகிசாசுரன் சிலை இருந்ததால் சர்ச்சை!

மகாத்மா காந்தியின் பொம்மை ஒன்றை, துர்கா தேவி வதம் செய்வது போல அமைக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை வெடித்தது.

Update: 2022-10-03 07:17 GMT

கொல்கத்தா,

அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைத்திருந்தனர். இந்த பந்தலில் கொலு பொம்மைகள் பல வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை ஒன்றை, துர்கா தேவியின் சூலாயுதத்தால் வதம் செய்யப்படுவது போல அமைக்கப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின், போலீசின் அறிவுறுத்தலின் படி காந்தி பொம்மையை மாற்றி மகிசாசுரன் பொம்மை ஒன்றை அங்கே வைத்தனர்.

மகாத்மா காந்தியின் உருவத்தை போல மகிசாசுரன் பொம்மை வடிவமைக்கப்பட்ட சம்பவம், தற்செயலாக நடந்த விஷயம். வேறு காரணங்கள் எதுவும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்த அவ்வாறு செய்யவில்லை, எதேச்சையாக நடந்தது என்று அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர் விளாக்கமளித்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், "இது தேசத் தந்தையை அவமதிக்கும் செயலாகும். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயலாகும்.

இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்ல போகிறது? காந்திஜியைக் கொன்ற நபர் எந்த கொள்கையை கொண்ட முகாமை சேர்ந்தவர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்