ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 14-16 தேதிகளில் இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார்.

Update: 2022-11-10 14:01 GMT

புதுடெல்லி,

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும்.

ஜி20 மாநாடு நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் சுற்றுலா தலமான இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தோனேசியா அதிபரின் அழைப்பின் பேரில், 17வது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 14-16 தேதிகளில் இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். அங்கு அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அத்துடன் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதை குறிக்கும் வகையில், ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ பிரதமர் மோடியிடம் வழங்குவார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்