கொரோனா, உக்ரைன் போரால் உலகில் உருவான நம்பிக்கை இன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - பிரதமர் மோடி அழைப்பு

கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலகில் உருவாகி இருக்கும் நம்பிக்கை இன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சர்வதேச தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Update: 2023-09-09 23:20 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:-

நீண்ட கால தீர்வுகள்

உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை, வடக்கு-தெற்குப் பிளவு, மேற்கு மற்றும் கிழக்கிற்கு இடையேயான இடைவெளி, உணவு, எரிபொருள் மற்றும் உர மேலாண்மை, பயங்கரவாதம், சுகாதாரம், ஆற்றல், நீர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற சவால்களுக்கு உறுதியான மற்றும் நீண்டகால தீர்வுகளை நோக்கி இணைந்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

கொரோனாவை தொடர்ந்து நம்பிக்கை குறைபாடு எனும் ஒரு புதிய நெருக்கடியை துரதிர்ஷ்டவசமாக உலகம் எதிர்கொண்டது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட போர்கள் (உக்ரைன்) இதை மேலும் மோசமாக்கியது.

ஆனால் கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயை நம்மால் தோற்கடிக்க முடிந்தால், இந்த நம்பிக்கை பற்றாக்குறையின் சவாலையும் வெல்ல முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்பிக்கை குறைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்தியா அழைக்கிறது

ஜி-20 தலைவர் என்ற முறையில், இந்த உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறையை, அளவற்ற நம்பிக்கையாக மாற்றுமாறு முழு உலகையும் இந்தியா அழைக்கிறது.

நீண்டகால சவால்கள் நம்மிடம் இருந்து புதிய தீர்வுகளை கோரும் காலம் இது. எனவே, மனித குலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், நமது பொறுப்புகளை நிறைவேற்றி நாம் முன்னேற வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்