முதல் முறையாக ஜி20 மாநாட்டுக்காக செல்போன் செயலி அறிமுகம்..!!

ஜி20 மாநாட்டுக்காக முதல் முறையாக செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.;

Update: 2023-08-31 00:53 GMT

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பு, உலகின் மிகவும் அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்றாக இயங்கி வருகிறது.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்காக தலைநகர் டெல்லி முழுவீச்சில் தயாராகி வருகிறது.

மாநாட்டை முன்னிட்டு டெல்லியை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரதமரின் முதன்மை செயலாளர்

இந்த பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் 9-வது கூட்டம், பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நேற்று நடந்தது.

இதில் ஜி20 செயலக அதிகாரிகள் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை, உள்துறை, கலாசாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக பிரகதி மைதானம் மற்றும் பாரத் மண்டபத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

நடராஜர் சிலை நிறுவுதல்

குறிப்பாக, மாநாட்டு அரங்கில் நடராஜர் சிலை நிறுவும் பணிகள், மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் இணையர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் பி.கே.மிஸ்ரா ஆய்வு செய்தார்.

மாநாட்டுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது அவர், மாநாட்டு நாட்களில் தலைநகர் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் சென்று சேர்வதில் எத்தகைய பாதிப்பும் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் மக்களுக்கு முன்னதாகவே வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பாதுகாப்பு மற்றும் நடைமுறை காரணங்களுக்காக விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பொதுமக்களுக்கு குறைந்த சிரமங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

பிரதமர் அலுவலகம் அறிக்கை

இந்த ஆய்வு கூட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜி20 மாநாட்டுக்காக முதல் முறையாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை தற்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள 'புத்தாக்க குடில்' மற்றும் 'டிஜிட்டல் இந்தியா அனுபவ மையம்' மூலம் ஜி20 பிரதிநிதிகள் மற்றும் ஊடக பணியாளர்கள் டிஜிட்டல் இந்தியா அனுபவத்தை நேரடியாக பெறுவார்கள்.

ஒரு தனித்துவமான இந்திய அனுபவத்தை பெறுவதற்காக கலாசாரம் மற்றும் ஜனநாயகத்தின் தாய் தொடர்பான கண்காட்சிகள் பாரத் மண்டபத்தில் நிறுவப்படும்.

கட்டுப்பாட்டு அறை

ஜி20 மாநாட்டுக்காக ஊடக ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடு ஊடக நிறுவனங்களில் இருந்து இதுவரை 3,600-க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதற்கான அனுமதி கடிதங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆடை அலங்கார ஒத்திகைகள் வருகிற நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு துறைகளுக்கு இடையே சுமுகமான ஒருங்கிணைப்புக்காக, பாரத் மண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாநாட்டு அரங்கம் மற்றும் பிரகதி மைதானத்துக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் வருகிற நாட்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்