உலக சவால்களுக்கு தீர்வு காண்பதில் ஜி20 நாடுகள் முக்கிய பங்காற்றும்; மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பேச்சு
உலக சவால்களுக்கு தீர்வு காண்பதில் ஜி20 நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
உலக சவால்களுக்கு தீர்வு காண்பதில் ஜி20 நாடுகள் முக்கிய பங்காற்றும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
பதற்றமான சூழல்
ஜி20 நாடுகள் சபையின் நிதித்துறை துணை மந்திரிகள், ரிசர்வ் வங்கி துணை கவர்னர்கள் கூட்டம் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஜி20 நாடுகள் சபையின் இந்திய தலைமையின் முக்கிய கருப்பொருள், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' (வாசுதைவ குடும்பகம்) என்ற முழக்கத்தை முன்வைத்து பணியாற்றுகிறது. தற்போது உலகில் கொரோனா பரவல் காரணமாக உலக பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. உணவு, மின்சாரம் போன்றவற்றுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. பெரும் பணவீக்கம், நாடுகளின் அதிக கடன் சுமை, காலநிலை மாற்றம், சில நாடுகள் இடையே நிலவும் பதற்றமான சூழல் (போர்) போன்றவற்றால் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய பங்காற்ற முடியும்
ஜி20 நாடுகள் தற்போது எழுந்துள்ள இந்த உலக சவால்களுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றும். அதாவது பேச்சுவார்த்தை, விவாதங்கள் மூலம் இவற்றுக்கு தீர்வு காணலாம். இந்த விஷயத்தில் இந்த நாடுகள் கவனம் செலுத்தலாம். உலக சவால்களுக்கு அனைவரும் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற முழக்கம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த குறிக்கோளை அடைய ஜி20 நாடுகளின் இந்த நிதி ஆய்வு குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் முக்கிய பங்காற்றும். அதாவது உலக சவால்களை எதிர்கொள்ள பன்முக வளர்ச்சி வங்கிகளை பலப்படுத்துதல், எதிர்கால நகரங்களுக்கு நிதி ஒதுக்குதல், நிதி உள்ளடக்கத்தை ஏற்படுத்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சர்வதேச வரி விதிப்பு போன்றவை குறித்து இங்கு விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியா நம்புகிறது
இந்த முக்கியமான விஷயங்களை முன்னெடுத்து செல்லும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நெருக்கடியான தருணத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க ஜி20 நாடுகளுக்கு நேரம் உள்ளது. அடுத்து வரும் முக்கியமான பிரச்சினைகளை எதிர்கொள்வது, அவற்றை தடுப்பது போன்றவற்றில் வெற்றி பெறுவதில் தான் நமது திறமை அடங்கியுள்ளது என்று இந்தியா நம்புகிறது.
இவ்வாறு அனுராக் தாக்கூர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் நிதித்துறை துணை மந்திரிகள், மத்திய வங்கி துணை கவர்னர்கள் உள்பட 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.