ஜி-20 மாநாடு: டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு -அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் வருகிறார்
ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் டெல்லி வருகிறார்.
புதுடெல்லி,
உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் தருணத்துக்காக தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது.
டெல்லியில் ஜி-20 மாநாடு
உலகின் அதிகாரம் மிக்க வல்லரசுகள், அந்த கனவை நோக்கி நடைபோடும் வளரும் நாடுகள் என சக்தி வாய்ந்த 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி-20 அமைப்பை உருவாக்கி உள்ளன.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா என பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகித்து உள்ளதால் சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த அமைப்பாக ஜி-20 கருதப்படுகிறது.
இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'பாரத் மண்டபம்' என்ற சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு நடக்கிறது.
பருவநிலை மாற்றம்
சர்வதேச பொருளாதாரம், பருநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுத்து வரும் ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
மேலும் உக்ரைன் போரின் எதிரொலியாக நிகழ்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் சமூக தாக்கங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதைத்தவிர வறுமை மற்றும் உலக சவால்களை எதிர்கொள்வதற்காக உலக வங்கி உள்ளிட்ட வளர்ச்சி வங்கிகளின் திறனை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
ஜோ பைடன் பங்கேற்பு
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.
இவர்களை தவிர ஐ.நா., சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்புகளின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
ஜின்பிங் பங்கேற்கவில்லை
மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது 7-ந் தேதியே (நாளை மறுநாள்) ஜோ பைடன் இந்தியா வருகிறார். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் சீன அதிபர் ஜின்பிங், இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என அந்த நாடு அறிவித்து உள்ளது. அவருக்கு பதிலாக பிரதமர் லி கியாங் பங்கேற்பார் என அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.
எனினும் அதிபர் ஜின்பிங் பங்கேற்காததற்கான காரணம் எதையும் சீனா வெளியிடவில்லை.
முன்னதாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் ஏற்கனவே பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு கூறியிருந்தார்.
பிரமாண்ட ஏற்பாடுகள்
சர்வதேச அளவில் அதிகாரம் மிகுந்த ஏராளமான தலைவர்கள் முதல் முறையாக ஒரே நேரத்தில் இந்தியாவில் திரளுவதால் அகில உலகின் கவனமும் டெல்லியை நோக்கி திரும்பி இருக்கிறது.
அதற்கு ஏற்றவாறு இந்தியாவும் இந்த தலைவர்களை வரவேற்கவும், மாநாட்டை வெற்றிகரமாக நடத்தவும் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் இந்த வேளையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு வருகிறது. சாலைகள், வீதிகள், கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் என பார்க்கும் இடமெல்லாம் புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
சாலைகள், முக்கிய சந்திப்புகள் என முக்கிய பகுதிகள் அனைத்திலும் தொட்டிகளில் பூஞ்செடிகள் வளர்த்து அழகு சேர்க்கப்பட்டு வருகின்றன. ஓவியங்கள், மாநாட்டு லோகோக்களின் படங்களால் சுவர்கள் பொலிவுறுகின்றன.
கைவினைப்பொருட்கள், சிலைகள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கட்டிடங்களால் டெல்லி நகர் முழுவதுமே புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
1.30 லட்சம் வீரர்கள் குவிப்பு
இது ஒருபுறம் இருக்க மாநாட்டுக்கான பாதுகாப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. உலகின் அதிகாரம் மிகுந்த தலைவர்கள் டெல்லியில் திரளுவதால் டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி டெல்லி போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் என 1.30 லட்சம் பேர் டெல்லியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சுமார் 45 ஆயிரம் பேர் ஹாக்கி சீருடைக்கு பதிலாக, நீல உடையில் பாதுகாப்பு பணிகளை கவனிப்பார்கள். இதில் ஹெலிகாப்டர்களை வீழ்த்தும் வல்லமை கொண்ட கமாண்டோ வீரர்கள், திறன் வாய்ந்த டிரைவர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.
வான் வழி வரும் அபாயங்களை தவிர்க்கும் வகையில் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் விமானப்படையின் ஏவுகணை தடுப்பு கருவிகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
இதைப்போல ராணுவம், டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் டிரோன் எதிர்ப்பு தளவாடங்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன.
சர்வதேச தலைவர்களை அழைத்து செல்வதற்காக ரூ.18 கோடியில் குண்டு துளைக்காத 20 ஆடம்பர சொகுசு கார்கள் (லிமோசின்) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பாதுகாப்புக்காக 20-க்கு மேற்பட்ட போர் விமானங்களையும், வீரர்களையும் அமெரிக்கா அனுப்பிவைத்துள்ளது.
35 தீயணைப்பு வாகனங்கள்
ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லி அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக களமிறக்கப்பட்டு உள்ளன. இதற்காக மாநாட்டு மைதானம், தலைவர்கள் தங்கும் பகுதிகள், அவர்கள் பார்வையிடும் இடங்கள் என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதில் முக்கியமாக 500-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 35 வாகனங்களில் மாநாட்டுக்காக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே பலமுறை ஒத்திகையும் நடத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதைப்போல குடிநீர், மருத்துவம், சுகாதாரம் என அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் மாநாட்டுக்காக தயாராகி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, ஜி-20 உச்சி மாநாட்டுக்காக டெல்லியில் வழக்கமான சேவைகளில் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் பொதுமக்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில் முக்கியமாக சாலை, ரெயில், விமான போக்குவரத்துகளில் பெரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் மாநாடு நடைபெறும் 2 நாட்கள் உள்பட 3 தினங்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் 70-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரெயில் நிலையங்கள் மூடல்
ஏராளமான மெட்ரோ ரெயில் மற்றும் பயணிகள் ரெயிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக வெளிநாட்டு தலைவர்கள் சென்றுவரும் பாதையில் உள்ள 39 மெட்ரோ ரெயில் நிலையங்களின் வாசலை குறிப்பிட்ட நேரங்களுக்கு மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
டெல்லி முழுவதும் டிரோன் பறக்க தடை, ஆன்லைன் பொருட்கள் வினியோக தடை, ரெயில்வே பார்சல் சேவை நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மக்கள் நிகழ்நேர போக்குவரத்து நடைமுறையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.