கர்நாடகத்தில் 'நம்ம கிளினிக்'குகளின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி

கர்நாடகத்தில் நம்ம கிளினிக்குகளின் மேம்பாட்டிற்கு வரும் நாட்களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-12-14 20:59 GMT

பெங்களூரு:-

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நம்ம கிளினிக்குகள்

கர்நாடகத்தில் முன்பு நகரங்கள், கிராமங்களில் சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் இருந்தன. அங்கு சளி, காய்ச்சல், இருமலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நகரங்களில் வசிக்கும் ஏழை-நடுத்தர மக்களுக்கு பயன்பெறும் வகையில் நாங்கள் நம்ம கிளினிக் மருத்துவ மையங்களை தொடங்குகிறோம். மாநிலம் முழுவதும் 438 கிளினிக்குகளை தொடங்குகிறோம்.

முதல்கட்டமாக 114 கிளினிக்குகளை திறக்கிறோம். இதன் செயல்பாடுகள் அடிப்படையில் வரும் நாட்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட பிற வசதிகள் ஏற்படுத்தப்படும். இங்கு தொலைதூர மருத்துவ சிகிச்சை வசதியும் ஏற்படுத்தப்படும். வரும் நாட்களில் இந்த நம்ம கிளினிக்குகளை மேம்படுத்த பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கர்நாடகம்-மராட்டியம் இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினை குறித்து ஆலோசிக்க இரு மாநிலங்களின் முதல்-மந்திரிகளின் கூட்டத்திற்கு உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொள்ள நான் இன்று (நேற்று) டெல்லி செல்கிறேன்.

நாங்கள் நினைக்கிறோம்

இதில் கர்நாடகத்தின் அரசியல், நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நிலைப்பாட்டை எடுத்து கூறுவேன். அதற்கு தேவையான விவரங்களையும் அங்கு எடுத்து வைப்பேன். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்திற்கு முன்பு பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் வந்தன. அந்த சட்டம் குறித்து மராட்டிய மாநில அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்த மராட்டியமாநிலத்தின் மனுவை விசாரணை நடத்த வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்னும் முடிவு செய்யவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பார்த்தால் மராட்டியத்தின் மனு விசாரணைக்கு ஏற்கப்படாது என்று நாங்கள் நினைக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, . அதுபற்றி அதிகம் பேச மாட்டேன்.

வழங்க மாட்டோம்

மகதாயி திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளது. நான் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தபோது மகதாயி கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தனர்?. சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது, மகதாயி நதி நீரை கர்நாடகத்திற்கு ஒரு சொட்டு கூட வழங்க மாட்டோம் என்று பேசினார். மகதாயி நதி நீரை கர்நாடகத்திற்கு கொண்டுவர நாங்கள் கால்வாய் அமைத்தோம். அந்த கால்வாய்க்கு காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனை ஆகும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்