புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'கந்ததகுடி' படத்திற்கு முழு வரி விலக்கு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘கந்ததகுடி’ படத்திற்கு முழு வரி விலக்கு அளிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.;
பெங்களூரு:
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், கடைசியாக கந்ததகுடி என்ற ஆவண படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வருகிற 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சி நிகழ்ச்சி, புனித் பர்வ என்ற பெயரில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. இதில், நடிகர்கள் சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ், யஷ், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தார்கள். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் புனித் பர்வ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
புனித் ராஜ்குமார் நம்மை விட்டு சென்று விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். அவர் நம்முடன் தான் இருக்கிறார். புனித் ராஜ்குமார் நடித்துள்ள கந்ததகுடி, கன்னட நாட்டின் கலை, இயற்கைக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், வனம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். டாக்டர் ராஜ்குமாரின் குணங்கள் 100 சதவீதம் புனித் ராஜ்குமாரிடமும் இருந்தது. அவர் கடைசியாக நடித்துள்ள கந்ததகுடி படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.