தேர்தல் அரசியலில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா ஓய்வு

முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நான் செய்த தவறுக்கு மக்கள் தன்னை மன்னிக்கும்படி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.;

Update: 2023-05-17 18:45 GMT

சிக்கமகளூரு-

முன்னாள் எம்.எல்.ஏ. ஒய்.எஸ்.வி.தத்தா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நான் செய்த தவறுக்கு மக்கள் தன்னை மன்னிக்கும்படி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஓய்.எஸ்.வி.தத்தா

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதியை சேர்ந்தவர் தத்தா. இவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தார். மேலும் கடூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். சட்டசபையில் இவர் பேச தொடங்கினால், அனைவரும் அமர்ந்து கேட்கும் அளவிற்கு புள்ளி விவரங்களை எடுத்துரைப்பார். மேலும் அரசியலில் தனக்கென ஒரு செல்வாக்கை வைத்திருந்தார். குறிப்பாக விவசாயிகளுக்காக இவர் 40 கிலோ மீட்டர்தூரம் மேற்கொண்ட பாதயாத்திரை, அனைவரையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இதேபோல பல போராட்டங்களை விவசாயிகளின் நலனுக்காக செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து ஒதுங்கி வந்தார். இதனால் அவர் காங்கிரசில் இணைவார் என்று கூறப்பட்டது.

காங்கிரசில் இணைந்தார்

அதன்படி ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து விலகிய ஒய்.எஸ்.வி.தத்தா காங்கிரசில் இணைந்தார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் கடூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். காங்கிரஸ் தலைமையிடமும் கடூர் தொகுதியை ஒதுக்கும்படி கூறினார். ஆனால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்று கொள்ளவில்லை. மாறாக அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், பின்னர் மீண்டும் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இணைந்தார். அவரை சேர்த்து கொண்ட ஜனதா தளம் (எஸ்) கட்சி, கடூர் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இந்த தொகுதியில் அவர் சூறாவளி பிரசாரம் செய்தார். எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியை சந்தித்தார். அது மட்டுமின்றி 20 ஆயிரம் வாக்குகளுக்கு கீழ் வாங்கினார். இது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. பல ஆண்டுகளாக அரசியலில் இருந்தோம், பல போராட்டங்களை நடத்தினோம். மக்கள் தன்னை தோற்கடித்துவிட்டார்கள் என்று மனம் கசந்தார். இதனால் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு

இது தொடர்பாக நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் செய்த தவறுக்கு மக்கள் என்னை மன்னித்துவிடவேண்டும். உங்களுக்கு செய்த துரோகத்திற்கு நான் அதற்கான பலனை அனுபவித்துவிட்டேன். அதேபோல மக்களை குறித்தும் நான் தெரிந்து கொண்டேன். நல்ல, திறமையான அரசியல் வாதிகளை மக்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். இதை நான் புரிந்து கொண்டேன். இனி நான் எந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை. முழுமையாக தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதனை மக்கள் ஏற்று கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்