பிறந்தநாள் கொண்டாட்டம்: பீர் குடிப்பதில் தகராறு.. மாடியிலிருந்து தள்ளிவிட்டதில் இளைஞர் பலி
மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உலாஸ் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 27-ந்தேதி தனது 23-வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். நண்பர் நிலேஷ் வீட்டின் 4-வது மாடியில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்போது பீர் குடிப்பது தொடர்பாக நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சக நண்பர்கள் சேர்ந்து தள்ளிவிட்டதில் கார்த்திக் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். நண்பன் கார்த்திக் மாடியில் இருந்து கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பயந்து போய் வெளியே ஓடிவிட்டனர்.
மாடியில் இருந்து கீழே விழுந்ததில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் தவறி கீழே விழுந்து கார்த்திக் இறந்துவிட்டதாக எண்ணினர். எனினும் சந்தேகம் கொண்ட உறவினர்கள், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் கார்த்திக்கின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக்கை தாங்களே கீழே தள்ளிவிட்டதாக தெரிவித்தனர். பீர் குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் கார்த்திக் நிலேஷை பீர் பாட்டிலால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், கார்த்திக்கை மாடியில் இருந்து தள்ளிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நண்பர்கள் தீரஜ் யாதவ், 23, நிலேஷ் க்ஷிர்சாகர், 23, மற்றும் சாகர் காலே, 24 ஆகிய 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.