மே.வங்க ஹவுராவில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்; இணைய சேவை துண்டிப்பு!

ஹவுரா மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-11 10:09 GMT

கொல்கத்தா,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பஞ்சால் பகுதியில் இன்று காலை வன்முறை ஏற்பட்டது.

அங்கு நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் அங்குள்ள உள்ளூர் கிளப்பை தாக்கி சூறையாடினர். அவர்களை போலீசார் கலைக்க முயன்றபோது, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். கும்பலை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தினர்.

அதே போல, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் டோம்ஜூர் பகுதியிலும் பதற்றம் நிலவியது. அங்கு வெள்ளிக்கிழமை மாலை காவல் நிலையம் தாக்கப்பட்டதில் சில போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு சுமார் 12 போலீசார் காயமடைந்தனர்.

இதனையடுத்து, ஹவுராவில் வன்முறை பரவுவதை தடுக்க மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.மாநிலத்தின் வன்முறை மையமாக ஹவுரா மாறியுள்ளது.

ஹவுராவில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து அதிகாரிகள் பல உள்ளூர் ரயில்களை ரத்து செய்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

வதந்திகள் பரவாமல் தடுக்க ஜூன் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை ஹவுரா ஊரக மாவட்ட காவல்துறை மற்றும் ஹவுரா காவல்துறை ஆணையத்தின் எல்லைக்கு உட்பட்ட மாவட்டம் முழுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பஞ்சால் மற்றும் ஜகத்பல்லவ்பூர் பகுதிகள் போன்ற மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் ஜூன் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மூத்த பாஜக தலைவர்கள் ஹவுரா மாவட்டத்தில் பதற்றம் நிலவும் பகுதிகளுக்குச் செல்லவிடாமல் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதை தொடர்ந்து, பாஜக எம்.பி. சவுமித்ரா கான், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். அதில் மாநிலத்தில் பதற்றம் நிலவும் பகுதிகளில் நிலைமையை கட்டுப்படுத்த மத்திய ஆயுதப் படைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஹவுரா கலவரங்களுக்கு பின்னால் பாஜக உள்ளது என மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், "இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் உள்ள பல இமாம்கள், முஸ்லீம் தலைவர்கள் ஆகியோர் மக்கள் போராட்டத்தைத் தவிர்த்து அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்