இலவச திட்ட வழக்கு: 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலவச திட்ட வழக்கினை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-24 07:30 GMT

புதுடெல்லி,

இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது.

இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது, "எந்தவொரு அரசின் கொள்கைக்கும், திட்டத்துக்கும் சுப்ரீம் கோர்ட்டு விரோதமாக இல்லை. மாநில அரசுகள் இலவச திட்ட அறிவிப்புகளை வெளியிட தடை விதித்து மத்திய அரசு ஒருவேளை சட்டம் இயற்றினால், மத்திய அரசு என்ன சட்டம் வேண்டும் என்றாலும் இயற்றி கொள்ளட்டும் என்றோ, அது விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று கூற முடியுமா?.

நாட்டின் பொருளாதார நலன் கருதியே இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம். இலவச திட்டத்தையும், சமூக நல திட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

சில மாநிலங்கள் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் சைக்கிள் வழங்குகின்றன. அவற்றால் அவர்களின் வாழ்வுமுறை மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சைக்கிள்களையும், படகுகளையும் கிராமப்புற ஏழைகள் சார்ந்திருக்கலாம். அவற்றை இங்கு அமர்ந்து கொண்டு விவாதிக்க முடியாது" என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்க இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் குழு அமைப்பதற்கு ஏற்கனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விகாரத்தில் நாங்கள் ஆணையம் அல்லது குழு அமைத்தால் அதனை அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்கள். எனவே, "இலவசங்கள் தொடர்பாக ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க கூடாது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை. தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்களை போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சம். இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர் நாளை ஆட்சிக்கு வரலாம், அப்படி வருபவர்கள் இதை நிர்வகிக்க வேண்டும். இலவச அறிவிப்புகளை வெளியிடுவது தனிநபர் அல்ல, அரசியல் கட்சிகள்தான். இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமைகளாக கோரும் அரசியல் கட்சிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

இதனையடுத்து தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கினை, டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்