கர்நாடகத்தில் புதிய வீடுகளுக்கும் இலவச மின்சாரம்; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

கர்நாடகத்தில் புதிய வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.;

Update: 2023-06-08 18:45 GMT

பெங்களூரு:

விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது

கர்நாடக அரசு, இலவச மின்சாரம் உள்பட 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அவற்றுக்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. கிரகஜோதி இலவச மின்சார திட்டம் வருகிற 1-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதுகுறித்து மின்சாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சித்தராமையா பேசியதாவது:-

இலவச திட்டங்கள் அனைத்தின் பயன்களையும் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறைகளை எளிமையாக்க வேண்டும். தேவையற்ற தகவல்கள், ஆவணங்களை கேட்கக்கூடாது. விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யும்போது, அதற்கு உரிய காரணங்களை கூற வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தை கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது. இலவச திட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரும்.

மக்களிடையே விழிப்புணர்வு

அதனால் சேவா சிந்து இணையதள சர்வரின் திறனை அதிகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மின் ஆளுமை துறை உரிய கவனம் செலுத்த வேண்டும். கிரகஜோதி திட்டத்தை வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கலபுரகியில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள குழப்பங்களை சரிசெய்ய வேண்டும். இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் பயன்பெற சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மின் விநியோக நிறுவனங்களின் அலுவலகங்களில் உதவி மையங்களை அமைத்து அங்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெங்களூரு ஒன், கர்நாடக ஒன், கிராம ஒன் மையங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டண பாக்கி

இது மட்டுமின்றி பயனாளிகள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமும் விண்ணப்பிக்க முடியும். புதிய வீடுகள் கட்டுகிறவர்கள், புதிதாக வாடகைக்கு வருபவர்களுக்கு கர்நாடகத்தின் மாதாந்திர சராசரி அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்படும். 12 மாதங்கள் முடிவடைந்த பிறகு அவற்றின் மாதாந்திர சராசரி அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் கட்டண பாக்கியை செலுத்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதார் எண், ஆர்.ஆர்.எண், வாடகை ஒப்பந்த பத்திரம், வீட்டு முகவரி அடையாள ஆவணம் வழங்க வேண்டும். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் உதவித்தொகை திட்ட தொடக்க விழா வருகிற ஆகஸ்டு மாதம் 17 அல்லது 18-ந் தேதி பெலகாவியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வரவு வைக்கப்படும்

இதற்கு விண்ணப்பிக்கும் பணி வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. சேவா சிந்து இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து நேரிலும் வழங்கலாம். இதற்காக தனியாக அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும்.

இந்த திட்டத்தின் பயன் 85 சதவீத குடும்பங்களுக்கு கிடைக்கும். வருமான வரி செலுத்தாத வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளோருக்கும் இதன் பயன் கிடைக்கும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், பெண்கள், குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கர், தலைமை செயலாளர் வந்திதா சர்மா, முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், மின்சாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ்குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்