வாடகை கார் நிறுவனங்களிடம் நூதன மோசடி; 3 பேர் கைது
போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி வாடகை கார் நிறுவனங்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூரு:-
பெங்களூருவில் 'ஓலா', 'ஊபர்' நிறுவனங்களின் வாடகை கார்கள் அதிகம் இயங்குகின்றன. அந்த கார்களில் பயணம் செய்வதற்கு செல்போன் செயலிகள் மூலம் முன்பதிவு செய்கின்றனர். அதிக பயணங்கள் மேற்கொள்ளும் கார் டிரைவருக்கு, அந்த நிறுவனங்கள் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஊக்கத்தொகையை பெற நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் மனோஜ் குமார், சச்சின் மற்றும் சங்கர் என்பது தெரியவந்தது. இதில் மனோஜ் குமார் வாடகை கார் டிரைவராகவும், சச்சின், நிதி நிறுவன ஊழியராகவும், சங்கர், தனியார் செல்போன் நிறுவனத்திலும் வேலை செய்து வருகிறார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் ஏராளமான சிம் கார்டுகளை பெற்று, அவற்றை வாடகை கார் நிறுவனங்களுடன் இணைத்துள்ளனர். மேலும், அந்த சிம் கார்டுகளை கொண்டு அவர்களே போலியாக பயணம் செய்ய பதிவு செய்து, வாடிக்கையாளரை குறித்த இடத்தில் இறக்கிவிட்டதாக கூறி பயணத்தை முடித்துள்ளனர். அதாவது மேற்கொள்ளப்படாத பயணத்தை காண்பித்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஊக்கத்தொகையை பெற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,055 சிம் கார்டுகள், 15 செல்போன்கள், 4 மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.