தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சம் மோசடி

சிவமொக்காவில் காப்பீட்டு நிறுவனத்தின் ெபயரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2022-10-23 18:45 GMT

சிவமொக்கா:

காப்பீட்டு நிறுவனம்

சிவமொக்கா டவுன் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிஷ். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்திருந்தார். ஆரம்பத்தில் சரியாக பணம் செலுத்திய ஆசிஷ், கடந்த 4 ஆண்டாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் மர்மநபர் ஒருவர் ஆசிசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஆசிசிடம் கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பணம் செலுத்தவில்லை. அந்த பணத்தில் பாதி தொகை உடனே செலுத்தினால், உங்களுக்கு முழு காப்பீட்டு தொகையும் கிடைக்கும் என்று கூறினார்.

இதை நம்பிய ஆசிஷ் தனது சகோதரர் மற்றும் தாயின் வங்கி கணக்கில் இருந்து ரூ.52 ஆயிரத்து 564 பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து சில நாட்கள் கழித்து காப்பீட்டு நிறுவனத்தின் மேலாளர் என்று கூறி ஒருவர் பேசினார். அவர் நீங்கள் செலுத்திய பணம் மற்றும் காப்பீட்டு நிறுவனம் சார்பில் உங்களுக்கு கிடைக்கும் பணத்திற்கு ஜி.எஸ்.டி கட்டவேண்டும். ஜி.எஸ்.டி கட்டவில்லை என்றால், உங்கள் காப்பீட்டு தொகையில் இருந்து பிடித்தம் செய்து குறைந்த அளவே கிடைக்கும் என்றார்.

ரூ.1 லட்சம் மோசடி

இதனை நம்பி ஆசிஷ், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.49 ஆயிரத்து 259 அனுப்பினார். அதன்பின்னர், ஆசிசால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும் அவர்களது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்று விசாரித்தார். அப்போது காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து யாரும் பேசவில்லை என தெரிவித்தனர்.

இதனால் யாரோ மர்மநபர்கள் காப்பீட்டு நிறுவனத்தின் பெயரில் தன்னிடம் ரூ.1 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் ஆசிஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்