கர்நாடகாவில் கார் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
துமகுரு,
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் லாரியும் காரும் புதன்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். குப்பி தாலுகாவில் உள்ள கோண்ட்லி கிராஸ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பலியானவர்கள் துமகுரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவை சேர்ந்த நாராயணப்பா (வயது 50), நாகரத்னா(வயது 45), சாகர் (வயது 25), ரஞ்சன்னா (வயது 25) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக குப்பி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.