மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஜாமீனில் விடுவிப்பு
மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து அனில் தேஷ்முக் இன்று மாலை வெளியே வந்தார்;
மும்பை,
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை மந்திரியான அனில் தேஷ்முக் 2019-ம் ஆண்டில் பொறுப்பேற்றார். அப்போது மது பார்களில் இருந்து மாதந்தோறும் பணம் வசூலித்து தரும்படி அனில் தேஷ்முக் கூறியதாக, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அப்போதைய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதினார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பண மோசடி வழக்கு பதிவுசெய்த அமலாக்கத் துறையினர், மந்திரி அனில் தேஷ்முக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ., ஊழல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஜாமீன் வழங்க கோரி மும்பை ஐகோர்ட்டில் கடந்த டிச.12-ல் அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பு எதிர்ப்பு தெரிவித்து. எனினும் சி.பி.ஐ. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையிலிருந்து அனில் தேஷ்முக் இன்று மாலை வெளியே வந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.