உம்மன்சாண்டி உடல் சொந்த ஊரில் அடக்கம்: இறுதி சடங்கில் ராகுல்காந்தி பங்கேற்பு

கேரள முன்னாள் முதல்-மந்திரி உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-07-20 23:10 GMT

திருவனந்தபுரம்,

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கடந்த 18-ந் தேதி அதிகாலையில் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பின்னர் அவரது உடல் பெங்களூருவில் முன்னாள் மந்திரி டி.ஜான் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா உள்பட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம்

அன்றைய தினமே பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட உம்மன்சாண்டியின் உடல் பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இரவு 8 மணிக்கு புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயம், காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான இந்திரா பவன் ஆகிய இடங்களில் உடல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் உம்மன்சாண்டியின் உடல் அலங்கரிக்கப்பட்ட கேரள அரசு பஸ்சில் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோட்டயம் வரை வழிநெடுக பொதுமக்களும், தொண்டர்களும் நின்றபடி உம்மன்சாண்டி உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

24 மணி நேரம் நடந்தது

24 மணி நேரம் இந்த ஊர்வலம் நடந்தது. நேற்று காலை கோட்டயம் திருநக்கரை மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உம்மன்சாண்டி உடல் வைக்கப்பட்டது. அங்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ், நடிகர் மம்முட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாலையில் சொந்த ஊரான காரோட்டு வள்ளச்சாலில் அவரது குடும்ப வீட்டிலும், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிலும் உடல் வைக்கப்பட்டது. அப்போது பேராயர்கள் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது.

உடல் அடக்கம்

இரவு 7.30 மணிக்கு மணிக்கு புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு அரசு மரியாதையின்றி தேவாலயத்தோடு சேர்ந்த கல்லறை தோட்டத்தில் இரவு 9 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் ராகுல் காந்தி, அரசு சார்பில் சபாநாயகர் சம்சீர் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசு மரியாதையோடு உடலை புதைக்க வேண்டாம் என உம்மன்சாண்டி தெரிவித்ததாக குடும்பத்தினர் மாநில அரசிடம் கூறினர். இதனால் அவருடைய எண்ணப்படி அரசு மரியாதை அளிக்கப்படவில்லை என கேரள அரசு கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்