மோடியின் வளர்ச்சிப் பணிகள், கட்சிக் கொள்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் நீதிபதி
ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ரோகித் ஆர்யா நேற்று பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.;
போபால்,
மத்திய பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் ரோகித் ஆர்யா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் போபாலில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நடந்த புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர் ராகவேந்திர சர்மா முன்னிலையில். ரோகித் ஆர்யா பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரோகித் ஆர்யா கடந்த 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். 2003-ம் ஆண்டு ஐகோர்ட்டு மூத்த வக்கீலாக பணியாற்றினார். 2013-ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதியாகவும், 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார்.
இந்நிலையில் மோடியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்சிக் கொள்கைகளை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ரோகித் ஆர்யா வெகுவாக பாராட்டினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) சாமானிய மக்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான சீர்திருத்தம் ஆகும். இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நீதி சன்ஹிதாவாக மாற்றுவது பெரிய விஷயம். இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில், பி.என்.எஸ். மக்கள் வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும்" என்று அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற 3 மாதத்தில் ரோகித் ஆர்யா, பா.ஜனதாவில் இணைந்துள்ளது, மத்தியபிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.