புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதது ஏன்? ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வரும் நிலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்று ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி விடுத்தார்.;

Update: 2022-06-18 22:36 GMT

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வீரர்கள் பற்றாக்குறை

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 'அக்னிபத்' திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம் என்பது புனிதமானது. இதற்காக முகாம் நடத்தி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படாததல் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது. அக்னிபத் வீரர்களில் 25 சதவீதம் பேரை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ள 75 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்புவது என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வடமாநிலங்கள் கலவரத்தால் பற்றி எரிகின்றன.

இந்த திட்டத்தை நிபந்தனையின்றி மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தென் மாநிலங்களுக்கும் இந்த கலவரம் பரவும் அபாயம் உள்ளது.

ரங்கசாமிக்கு கேள்வி?

தற்போதைய முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்களை பார்த்து முழு பட்ஜெட் தாக்கல் செய்யாதது ஏன்? என்று கேள்வி கேட்டார். நாங்கள் பட்ஜெட் தயார் செய்து மத்திய உள்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது அதற்கு அனுமதி அளிக்க காலதாமதம் செய்தார்கள். ஆனால் இப்போது பா.ஜனதா கூட்டணியில்தான் அவர்கள் உள்ளனர். அப்படியிருக்க முழு பட்ஜெட் தாக்கல் செய்யாதது ஏன்? என்பதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களுக்கு விளக்கம் தரவேண்டும்.

சம்பளம் இல்லை

புதுவை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை நிலவி வருவதே இதற்கு காரணம்.

நான் முதல்-அமைச்சருக்கு சவால் விடுகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தவிர வேறு ஏதாவது புது திட்டங்கள் கொண்டுவரப்பட்டதா? 100 அடி ரோடு மேம்பாலம், அரும்பார்த்தபுரம் மேம்பாலம் என அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது. மின்துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம்.

இலவச அரிசி திட்டம் முடக்கம்

புதுவை மாநிலத்தில் வசிக்க முன்வந்தவர்கள் தற்போது மாநிலத்தைவிட்டு வெளியேறி வருகிறார்கள். இலவச அரிசி திட்டம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ரூ.294 கோடி ஒதுக்கப்பட்டும், அது மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்