'பாஜகவுக்கு மாறியபின் திருத்த மறந்து விட்டேன்...' - தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவை 'பாரத்' என மாற்றிய அசாம் முதல்-மந்திரி
அசாம் மாநில பாஜக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியா என்பதை பாரத் என திருத்தி உள்ளார்.
கவுகாத்தி,
அசாம் மாநில பாஜக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா டுவிட்டர் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த அவர், தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பில், 'அசாம் முதல்-மந்திரி, இந்தியா' என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள புதிய கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது டுவிட்டர் தளத்தில் இந்தியா என்பதை பாரத் என திருத்தி உள்ளார். தற்போது அவரது டுவிட்டர் முகப்பில், 'அசாம் முதல்-மந்திரி, பாரத்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து அவர், 'எனது முந்தைய பக்கத்தில் அசாம், இந்தியா என குறிப்பிட்டு இருந்தேன். இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியபின் இதை திருத்த மறந்து விட்டேன். எனவே தற்போது பெருமையுடன் அசாம், பாரத் என திருத்தி விட்டேன். காங்கிரசில் உள்ள நண்பர்கள் சிலர் இந்த மாற்றத்துக்கு காரணம் கேட்டனர். இந்த விளக்கம் அவர்களுக்கு போதும் என நினைக்கிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
அசாம் முதல்-மந்திரியின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் குறைகூறியுள்ளது. திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என திட்டங்களுக்கு பெயர் வைக்கும் பிரதமர் மோடியிடம் இதை எடுத்துக்கூறுமாறு காங்கிரஸ் கூறியுள்ளது.