இந்திய டாப் 100 கோடீசுவரர்களின் போர்ப்ஸ் பட்டியல்; முதல் இடத்தில் அதானி, அம்பானிக்கு 2-வது இடம்

இந்தியாவின் டாப் 100 கோடீசுவரர்கள் பற்றிய போர்ப்ஸ் பட்டியலில் முதல் இடத்தில் கவுதம் அதானி தொடர்ந்து நீடித்து வருகிறார்.

Update: 2022-11-29 08:24 GMT


புதுடெல்லி,


நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 கோடீசுவரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த 100 கோடீசுவரர்களின் கூட்டு சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 200 கோடியில் இருந்து ரூ.65 லட்சத்து 34 ஆயிரத்து 404 கோடி அளவுக்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.

நாட்டில் பங்கு வர்த்தக சூழல் கடந்த ஓராண்டுக்கு முன்பு வீழ்ச்சி கண்டிருந்தபோதும், இந்திய ரூபாய் மதிப்பு 10 சதவீதம் அளவுக்கு சரிந்தபோதும் இந்த வளர்ச்சியானது எட்டப்பட்டு உள்ளது.

இதன்படி, பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து கவுதம் அதானி நீடித்து வருகிறார். இதற்கு அடுத்து 2-வது இடத்தில் தொடர்ந்து முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார்.

போர்ப்ஸ் அறிக்கையின்படி, முதல் 10 இடத்தில் உள்ள கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ.31 லட்சத்து 44 ஆயிரத்து 681 கோடியாக உள்ளது. இந்த பணக்காரர்களின் பட்டியலில் 9 பெண்களும் இடம் பெற்று உள்ளனர்.

இந்தியாவின் ஆண் கோடீசுவரர்களில் முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்து 200 கோடியாகவும், பெண் கோடீசுவரர்களில் முதல் இடத்தில் உள்ளவரின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 950 கோடியாகவும் உள்ளது.

இதேபோன்று, இந்த பட்டியலில் இடம் பெற்ற பெண் கோடீசுவரர்களில் குறைந்தபட்ச சொத்து மதிப்பு கொண்டவரிடம் ரூ.15 ஆயிரத்து 519 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்