சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிற்கு 40 இடங்களே கிடைக்கும் ராகுல்காந்தி பேச்சு
சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிற்கு 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என ராகுல் காந்தி கூறினார்.;
சிக்கமகளூரு-
சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிற்கு 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என ராகுல் காந்தி கூறினார்.
மாநிலம் முழுவதும் பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூருவுக்கு ராகுல்காந்தி பிரசாரம் செய்ய வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர்.
இதையடுத்து ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மகாத்மா காந்தி சாலையில் ஊர்வலமாக சென்றார். அவரை காண காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்து இருந்தனர். தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து ராகுல் காந்தி கை அசைத்தார். பின்னர் ஆசாத் பூங்காவில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிக்கமகளூரு எனது பாட்டிக்கு (இந்திரா காந்தி) மறுவாழ்வு கொடுத்த ஊராகும்.
இயற்கையான ஊர்
நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி (இந்திரா காந்தி) சிக்கமகளூரு மிகவும் அருமையான, இயற்கையான ஊர் என கூறியுள்ளார். நாளடைவில் எனக்கும் இங்கு வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சிக்கமகளூரு மண்ணில் நான் தற்போது எனது பாட்டியின் (இந்திரா காந்தி) நினைவை வைத்து பேசுவதற்கு பெருமை அளிக்கிறது. பா.ஜனதா ஆட்சி மற்றவர்கள் காலை வாரி திருட்டுத்தனமாக மோசடி செய்து வந்த ஆட்சியாகும்.
இதுபோன்ற ஆட்சிக்கு மக்கள் மீண்டும் வழி வகுத்து கொடுக்க கூடாது. பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷன் பெற்று, ஊழல் செய்துள்ள ஆட்சியாகும். 40 சதவீத கமிஷன் கேட்டதாக ஒப்பந்ததாரர் பிரதமருக்கு கடிதம் எழுதியும், இதுவரை அதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவினருக்கு மக்கள் நல்ல பதிலடி கொடுப்பார்கள்.
பா.ஜனதா 40 இடங்கள்
மாநிலத்தில் 40 சதவீதம் கமிஷன் பெற்று ஊழல் செய்துள்ள பா.ஜ.க. 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம், இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பல திட்டங்களை கூறி உள்ளோம். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் சந்தீப், மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்சுமந்த் உள்பட பலர் இருந்தனர்.