சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றுவதற்காக சட்டத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இல்லை
சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றுவதற்காக சட்டத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இல்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
மங்களூரு;
சூரத்கல் சுங்கச்சாவடி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள சூரத்கல் சுங்கச்சாடியை அகற்றக்கோரி அதனை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் காங்கிரஸ் கட்சியினர் உள்பட பலர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து நேற்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியதாவது;- சூரத்கல் சுங்கச்சாவடி அமைக்க முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பா.ஜனதா தான்.
சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆரம்பத்தில், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டபோது எங்கள் கட்சிதான் முதலில் எதிர்த்தது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, சுங்கச்சாவடியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 20 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளோம். ஆனால், சட்டத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இல்லை.
பேச்சுவார்த்தை
தேசியதொழில்நுட்ப கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் உள்ள சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 2013-ல் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டபோது நாகரிக ஹிதரக்ஷனா வேதிகே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 2019-ல் தளப்பாடி மற்றும் ஹெஜமாடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டன.
சுங்கச்சாவடி அமைக்கப்பட்டபோது நெடுஞ்சாலை துறை (கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம்) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்றுவது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
சட்டத்தை கையில் எடுக்க...
சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவை உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல. இருப்பினும், ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவதில் தவறில்லை, ஆனால் அது அமைதியான முறையில் செய்யப்பட வேண்டும், சட்டத்தை கையில் எடுக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.