விவசாய பம்புசெட்டுகளுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரம்- மந்திரி சுனில்குமார் தகவல்
விவசாய பம்புசெட்டுகளுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதாக மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் கவுஜலகி கேட்ட கேள்விக்கு மின்துறை மந்திரி சுனில்குமார் பதிலளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் வீடுகளை கட்டி கொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்கு தொடர்ந்து ஒருமுனை மின்சாரம் வினியோகம் செய்யப்படும். மேலும் மின் இணைப்பு இல்லாத தோட்ட வீடுகளுக்கும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கு தினமும் 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த 7 மணி நேரம் என்பது தொடர்ச்சியாக இல்லாமல் இடைப்பட்ட நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.
முன்னதாக பேசிய உறுப்பினர் கவுஜலகி, "கர்நாடகத்தில் விவசாயிகள் தங்களின் நிலத்தில் வீடுகளை கட்டிக்கொண்டு வசிக்கிறார்கள். அந்த வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் அவர்கள் எப்படி பாடங்களை படிக்க முடியும்? என்றார்.