சரத்பவார் தலையீட்டை தொடர்ந்து, சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க காங்கிரஸ் சம்மதம்

ராகுல்காந்தியின் கருத்தால் கூட்டணிக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் சரத்பவார் தலையீட்டை தொடர்ந்து, சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து உள்ளது.

Update: 2023-03-28 21:44 GMT

கூட்டணி உடையும் ஆபத்து

மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவ்வப்போது கூறி வருகிறார். எம்.பி. பதவி பறிப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, "நான் மன்னிப்பு கேட்க சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி" என்று பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி எனப்படும் உத்தவ் தாக்கரே கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டது.

கார்கே தலைமையில் கூட்டம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா, பாரதீய ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தியும் கலந்து கொண்டனர். சாவர்க்கர் பற்றி ராகுல்காந்தி பேச்சை தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் பேசிய சரத்பவார் பேசுகையில், "சாவர்க்கர் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தது இல்லை. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவை தான் நாம் எதிர்க்க வேண்டுமே தவிர சாவர்க்கரை அல்ல. சாவர்க்கரை எதிர்ப்பது மராட்டிய கூட்டணிக்கு உதவாது" என்றார்.

சரத்பவாரின் இந்த கருத்தை மற்ற கட்சி தலைவர்களும் ஆமோதித்தனர். சாவர்க்கர் பற்றிய பிரச்சினையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சஞ்சய் ராவத் பேட்டி

இதற்கிடையே உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகா விகாஸ் அகாடி கூட்டணி அப்படியே உள்ளது. இந்த கூட்டணி உடையும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். சாவர்க்கர் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, மகா விகாஸ் அகாடி தலைவர்களிடம் கொண்டு சென்றேன். அனைவரும் ஒரே கருத்தில் தான் உள்ளனர். சவார்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பதாக ராகுல்காந்தி என்னிடம் உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்