பீகாரை தொடர்ந்து ஜார்கண்டில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ராஞ்சி,
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பீகாரில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பாலமும், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலங்கள் என 11 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்தன. மேலும் குஜராத், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விமான நிலையங்களில் மேற்கூரைகள் தொடர்ந்து இடிந்து விழுந்தன. இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜார்கண்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கிரிதி மாவட்டத்தில் பீகார் மாநிலத்தை இணைக்கும் வகையில் அர்கா ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.