லால்பாக்கில் வருகிற 19-ந் தேதி மலர் கண்காட்சி தொடக்கம்
பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினத்தையொட்டி வருகிற 19-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தோட்ட கலைத்துறை முடிவு செய்துள்ளது.;
பெங்களூரு:
பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினத்தையொட்டி வருகிற 19-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தோட்ட கலைத்துறை முடிவு செய்துள்ளது.
வருகிற 19-ந் தேதி மலர் கண்காட்சி
பெங்களூரு லால்பாக்கில் ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும். கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் மலர் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. கடந்த ஆண்டு (2022) சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சியை கண்டு ரசித்திருந்தனர்.
இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்துவதற்கு தோட்ட கலைத்துறை தயாராகி வருகிறது. இதற்காக தற்போது இருந்தே லால்பாக்கை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, குடியரசு தினத்தையொட்டி வருகிற 19-ந் தேதி முதல் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடத்துவதற்கு தோட்ட கலைத்துறை முடிவு செய்திருக்கிறது.
கண்ணாடி மாளிகையில்...
கொரோனா பாதிப்பு தற்போது குறைந்திருப்பதால் 10 நாட்கள் கண்காட்சியை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா பரவலை பரிசீலித்து எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை கூடிய விரைவில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலர் கண்காட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் பிரபலங்கள், சுற்றுலா தளங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு பெங்களூரு நகரின் வரலாற்றையும், பெங்களூரு கடந்த வந்த பாதை குறித்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்ணாடி மாளிகையில் வைக்க தோட்டக்கலைத்துறையினர் தீர்மானித்துள்ளனர். அதே நேரத்தில் மலர் கண்காட்சியின் போது கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். கொரோனா காரணமாக இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் மலர் கண்காட்சியின் போது கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.