பட்ஜெட் கூட்டத்துக்கு காதில் காவி நிற பூக்களை வைத்து வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள்
பட்ஜெட் கூட்டத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் காவி நிற பூக்களை வைத்து வந்தனர்.
பெங்களூரு:
பட்ஜெட் கூட்டத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் காவி நிற பூக்களை வைத்து வந்தனர்.
காதில் பூ
கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை காலை 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் காவி நிற செண்டு மல்லி பூக்களை வைத்துக்கொண்டு வந்திருந்தனர்.
பட்ஜெட்டை தாக்கல் செய்த பசவராஜ்பொம்மை உரையை தொடங்கும் முன், காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் வைத்துள்ள பூக்களை அகற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, இந்த அரசு கடந்த 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்ட திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறி வருகிறது. இந்த நிலையில் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இதில் இடம்பெற்றுள்ள திட்டங்களை இந்த அரசால் எப்படி செயல்படுத்த முடியும்?. மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம் என எதிர்ப்பை தெரிவிக்கவே காதில் பூக்களை வைத்து வந்துள்ளோம். அகற்றமாட்டோம் என்றார்.
சலசலப்பு
இதற்கிடையே குறுக்கிட்ட மந்திரிகள் ஆர்.அசோக், மாதுசாமி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கடும் ஆட்சேபனை தெரிவித்து எழுந்து நின்று பேசினர். அதற்கு பதிலடியாக காங்கிரஸ் உறுப்பினர்களும் பேசினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. உடனே சபாநாயகர் காகேரி இருதரப்பினரையும் இருக்கையில் அமரும்படியும், பட்ஜெட் உரையை முதல்-மந்திரி பேச வேண்டும் என்றும் கூறினார்.
இருப்பினும் இருகட்சியினரும் சிறிது நேரம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர், "காவி நிறம் உங்களுக்கு (பா.ஜனதா) ஆதரவானது தானே" எனக் கூறி பா.ஜனதா உறுப்பினர்களை சமாதானப்படுத்தினார். அதையடுத்து சட்டசபையில் அமைதி திரும்பியது. இதைத்தொடர்ந்து பசவராஜ்பொம்மை பட்ஜெட்டை மீண்டும் வாசிக்க தொடங்கினார். இந்த சம்பவத்தால் சுமார் 5 நிமிடம் சலசலப்பு நீடித்தது. பட்ஜெட் கூட்டத்தின் இறுதி வரை காங்கிரஸ் உறுப்பினர்கள் காதில் பூக்கள் வைத்தப்படியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.