குஜராத் ஏர்போர்ட்டில் அனுமதியின்றி இறங்கிய விமானம்.. பதறிய பயணிகள்...!

குஜராத் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய சில வினாடிகளில் விமானம் மீண்டும் மேலெழுந்து பறந்தது பயணிகளை பதற்றம் அடைய செய்தது.

Update: 2023-05-24 12:17 GMT

ஆமதாபாத்,

சண்டிகரில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் நோக்கி 6E 6056 என்ற எண் கொண்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது கடந்த திங்கட்கிழமை இரவு 8.45 மணியளவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது. இதனால், பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில் இருந்தபடி தயாரானார்கள்.

ஆனால், விமானம் தரையிறங்கிய சில வினாடிகளில் உடனே மேலே எழுந்தது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் என்னவென்று தெரியாமல் பதற்றம் அடைந்தனர். இதுபற்றி விமான பயணியான டாக்டர் நீல் தக்கர் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விமானம் தரையிறங்கிய உடனேயே, அது மீண்டும் மேலே பறந்து சென்றது.

இதனால், என்ன நடந்தது!! என்று யாருக்கும் புரியவில்லை. நாங்கள் பீதியடைந்தோம். இறுதியாக 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட பிறகு விமானம் தரையிறங்கியது என கூறியுள்ளார். இதுபற்றி தக்கர், நேற்று (செவ்வாய் கிழமை) டி.ஜி.சி.ஏ. மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு இ-மெயில் ஒன்றும் அனுப்பியுள்ளார்.

இதேபோன்று, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட ஒரு நிலையற்ற சூழலால், உடனடியாக மீண்டும் மேலே பறந்து செல்லும்படி விமானியை அறிவுறுத்தினோம். இதனால், பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்