பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் மீன் விற்பனை கடை திறக்கப்படும்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் மீன் விற்பனை கடை திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-10-16 18:30 GMT

பெங்களூரு: பெங்களூருவில் அனைத்து வார்டுகளிலும் மீன் விற்பனை கடை திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

மீன் விற்பனை கடை

கர்நாடக அரசின் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெங்களூருவில் மீன் உணவை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் மீன்கள் தேவை அதிகமாக உள்ளது. அதனால் நகரில் அனைத்து வார்டுகளில் மீன் விற்பனை கடை திறக்கப்படும். இதனால் மீனவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு மற்றும் வருமானம் கிடைக்கும். தனியார்கள் இந்த கடைகளை நடத்த முன்வந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கி கொடுக்கப்படும். இத்தகைய கடைகளை அனுமதிப்பதால் வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

திடமான நடவடிக்கை

மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பது எங்கள் அரசின் நோக்கம் ஆகும். மீனவர்களின் நலனுக்காக எங்கள் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. வேறு எந்த அரசும் இந்த அளவுக்கு திட்டங்களை செயல்படுத்த முடியாது. மீனவர்களின் குழந்தைகளுக்கு வித்யா நிதி திட்டத்தின் கீழ் கல்வி நிதி உதவியை வழங்குகிறோம். ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ரூ.40 கோடி கல்வி நிதியை வழங்க இருக்கிறோம்.

இது மீனவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த எங்கள் அரசு எடுத்துள்ள திடமான நடவடிக்கை ஆகும். மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான கட்டுமான பணிகள் வருகிற ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும். கர்நாடகத்தில் மீன் உற்பத்தி இன்னும் அதிகரிக்க வேண்டும். அண்டை மாநிலமான ஆந்திராவில் மீன் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஒரு குழுவை ஆந்திராவுக்கு அனுப்பி அங்கு மீன் உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்படும்.

படகுகளை சீரமைக்க...

பிரதமரின் மீன்வள திட்டத்தின் கீழ் 100 மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு டீசலுடன் மண்எண்ணெயும் அவர்கள் கேட்கும் அளவுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வெள்ளத்தின் போது சேதம் அடைந்த படகுகளை சீரமைக்க உதவி செய்யப்படும்.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒரு ஏரி, மீன் வளர்ப்புக்கு ஒதுக்கப்படும். வலைகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் 1,000 பேருக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்