ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் 'பிரசாதம்'

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.;

Update: 2023-06-09 23:00 GMT

ஐதராபாத், 

ஒவ்வொரு ஆண்டும், பருவ மழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள்.

இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் அங்கே கூடுவது வழக்கம். இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தொற்றின் தீவிரம் கட்டுக்குள் வந்தபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் வருடாந்திர நிகழ்வு கடந்த ஆண்டும் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தெலுங்கானா கால்நடை பராமரிப்பு துறை மந்திரி தலசானி சீனிவாஸ் யாதவ் இந்த முகாமை தொடங்கி வைத்தார். மீன் பிரசாதத்தை பெற தெலுங்கானா மட்டும் அல்லாது ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா, தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்த முகாமில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மீன் பிரசாதமாக, உயிருள்ள விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுத்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி வரை மீன் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என பாத்தினி மிருகசீரா அறக்கட்டளை பிரதிநிதிகள் மற்றும் பாத்தினி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

இருமல், ஆஸ்துமா போன்ற தீராத சுவாச நோய்களுக்கு 190 ஆண்டுகளுக்கு மேலாக மீன் பிரசாதம் வழங்கி வருகிறோம். இந்த மீன் மருத்துவ சிகிச்சையை சேவை மனப்பான்மையுடன் இலவசமாக அளித்து வருகிறோம். எங்கள் பரம்பரையை சேர்ந்த முன்னோர் நிஜாம் காலத்தில் இருந்தே இந்த மீன் மருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த சேவை இப்போதுவரை தொடருகிறது.

மீன் மருந்து சாப்பிட்டவர்களுக்கு ஆஸ்துமா குணமாகும். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தீரும். ஒரு முறை சாப்பிட்டால் திரும்ப நோய் வராது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஒருமுறை மீன் மருந்து சாப்பிட்டாலே ஆஸ்துமா குணமாகிவிடும் என்று முகாமுக்கு வந்தவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இதை எடுத்துக்கொண்டால் நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மீன் மருத்துவ முகாமுக்காக லட்சக்கணக்கான மீன்களை தெலுங்கானா அரசின் மீன் வளத்துறை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசு சார்பில் குடிநீர் வசதி, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி போன்றவையும் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்