ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் 51 மணி நேரத்திற்கு பின் முதல் ரெயில் இயக்கம்...!
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.;
புவனேஷ்வர்,
மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட வழிதடத்தில் இருந்து மாறிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மாற்று ரெயில் தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது, அப்போது அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரெயில் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
3 ரெயில்கள் விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தில் மொத்தம் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை அகற்றும் பணிகளும் அவ்வழியாக மீண்டும் ரெயில்களை இயக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் ரெயில் இயக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் நேற்று முன் தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதையும் ஆய்வு செய்தார்.