நீலகிரி தோப்பு உள்பட 2 இடங்களில் தீ விபத்து

சிக்கமகளூருவில் நீலகிரி தோப்பு உள்பட 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏராளமான மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமானது.

Update: 2023-03-01 18:45 GMT

சிக்கமகளூரு:-

தைலமரத்தோப்பில் தீ விபத்து

சிக்கமகளூரு மாவட்டம் சகுனிபுரா கிராமத்தில் நீலகிரி தோப்பு உள்ளது. இங்கு ஏராளமான தைல மரம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த நீலகிரி தோப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் ஏராளமான மரங்கள் எரிந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பிலும் 50-க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து சாம்பலானது. விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழுந்துவிட்டு எரிகிறது

இதே போல சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா தேவரமனே கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்ததில், அந்த பகுதியில் இருந்த செடி, கொடிகள் முழுவதும் பரவியது.

தொடர்ந்து கட்டுக்குள் அடங்காமல் தீ எரிந்ததால் வனத்துறையினர், இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தேவரமனே வனப்பகுதி பெரியது என்பதால், தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து கூடுதல் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து, அந்த தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்