பாலிதீன் குடோனில் பயங்கர தீ
பெங்களூருவில் பாலிதீன் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எந்திரங்கள், பொருட்கள் தீயில் நாசமானது.
பெங்களூரு:
பெங்களூருவில் பாலிதீன் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் எந்திரங்கள், பொருட்கள் தீயில் நாசமானது.
பாலிதீன் குடோன்
பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட விருஷபாவதி நகர் பகுதியில் 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் பாலிதீன் குடோன் உள்ளது. இந்த குடோனில் ஏராளமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த குடோனில் இருந்த பாலிதீன் பொருட்களில் திடீரென தீப்பிடித்தது.
அந்த தீ மளமளவென பரவி அங்கு சேமித்து வைத்து இருந்த பொருட்கள் மீது பிடித்து எரிந்தது. இதனால் குடோன் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்து அந்த பகுதியினர் உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.
பல லட்சம் ரூபாய் பொருட்கள்...
இதையடுத்து குடோனில் பிடித்து எரிந்த தீயை நீண்டநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமலும் தடுத்தனர். இதற்கிடைய காமாட்சிபாளையா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. இந்த விபத்தால் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள், எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.